‘யூ டியூப்’ பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது


‘யூ டியூப்’ பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 9:25 PM GMT (Updated: 1 Jun 2021 9:25 PM GMT)

குன்னம் அருகே ‘யூ டியூப்’ பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 350 லிட்டர் சாராய ஊறலையும், 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

குன்னம்;

சாராயம் காய்ச்சினர்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை தடுக்க முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதனால் மது பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடினர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்த வீரமுத்துவின் மகன் குமார்(வயது 34). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
இதேபோல் கிழுமத்தூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த சேகரின் மகன் விஜயகுமார்(34). ஆட்டோ டிரைவர். குடிப்பதற்கு மது கிடைக்காததால் குமாரும், விஜயகுமாரும் ‘யூ டியூப்’ பார்த்து, அதன்படி அவரவர் வீட்டில் சாராய ஊறலை தயாரித்து, சாராயம் காய்ச்சி தயார் செய்துள்ளனர். சாராயத்தை அவர்கள் குடித்தது மட்டுமல்லாமல் அருகில் உள்ளவர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
பறிமுதல்
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் மேற்பார்வையில், குன்னம் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கிழுமத்தூர் கிராமத்திற்குச் சென்று வீடு, வீடாக சோதனையிட்டனர். இதில் குமார் தனது வீட்டில் உள்ள குளியலறையில் பிளாஸ்டிக் பேரலில் 250 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 25 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விஜயகுமார் வீட்டில் உள்ள வைக்கோல் போர் மறைவில் பிளாஸ்டிக் பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த 25 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட சாராய ஊறல் சம்பந்தப்பட்ட இடத்திலேயே அழிக்கப்பட்டது.
2 பேர் கைது
பின்னர் 2 பேரையும், குன்னம் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், 2 பேரும் ‘யூ டியூப்’ பார்த்து, அதில் கூறியவாறு சாராயம் காய்ச்சியதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில், அவர்கள் ஜெயங்கொண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story