சேலத்தில் வீடு தேடி வரும் நடமாடும் மளிகை கடைகள் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சேலத்தில் வீடு தேடி வரும் நடமாடும் மளிகை வாகன சேவை நேற்று தொடங்கியது. இந்த சேவைக்கு இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சேலம்:
சேலத்தில் வீடு தேடி வரும் நடமாடும் மளிகை வாகன சேவை நேற்று தொடங்கியது. இந்த சேவைக்கு இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மளிகை பொருட்கள்
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால், பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சேலம் மாநகரில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
அதே போன்று மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி மொத்த சந்தைகளில் மளிகை பொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
59 வாகனங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 59 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டங்களிலும் இந்த வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாநகர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
அதன்படி அன்னதானப்பட்டி, அழகாபுரம், நெத்திமேடு, 4 ரோடு, சூரமங்கலம் கிச்சிப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களுக்கு நடமாடும் மளிகை கடைகள் வீடு தேடி வந்தன. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மளிகை பொருட்கள் வீடுகளுக்கே தேடி வரும் இந்த திட்டத்திற்கு இல்லதரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் வரவேற்பு அளித்து உள்ளனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
இது குறித்து பெரமனூரை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் எப்படி வாங்குவது என்ற அச்சத்தில் இருந்தோம். தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது வரவேற்கத்தக்கது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், வீடுகளுக்கே மளிகை பொருட்கள் வினியோகம் செய்ய 59 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விற்பனை செய்ய பலர் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் ஊரடங்கையொட்டி நிர்ணயிக்கப்பட்டதை விட மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story