மருந்து கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
மருந்து கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்:
மருந்து கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சேலம் மாவட்டத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும், காய்கறி, மளிகை போன்ற பொருட்களும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் தெருக்களிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடி வருகின்றார்கள். இதனால் பொது மக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதனை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்து அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம்.
கடும் நடவடிக்கை
பொதுமக்கள் மருந்து கடைகளுக்கு செல்லும் போது முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருந்துகடைக்கு வரும் பொதுமக்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனவா? என்பதனை மருந்துகடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை பின்பற்றாத மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனுக்கள்
மேலும் கூட்டத்தில், முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணைய வாயிலாக வரப்பெற்ற மனுக்கள் குறித்து துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இணைய வாயிலாக உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் துறையின் சார்பில் 1,987 மனுக்களும், வருவாய்த்துறையின் சார்பில் 8,061 மனுக்களும், அரசின் தலைமைத்துறை மற்றும் பிற மாவட்டங்களிடமிருந்து வரப்பெற்ற 2,632 மனுக்களும், பிறத்துறைகளின் சார்பில் 5,736 மனுக்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 416 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு தீர்வுகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது
Related Tags :
Next Story