முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: சேலத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை


முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: சேலத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 2 Jun 2021 4:23 AM IST (Updated: 2 Jun 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதையொட்டி சேலத்தில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம்:
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதையொட்டி சேலத்தில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தளர்வில்லா முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு 2-ம் கட்டமாக நீடிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு நடைமுறைகளின்படி, சேலம் மாவட்டத்தில் காய்கறி-மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு பணி
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என தனித்தனியே வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் சேலம் கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை, செரி ரோடு அம்பேத்கர் சிலை அருகில் என நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் பறிமுதல்
அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலைகள் மற்றும் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அடிக்கடி வந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். 

Next Story