நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு 300 ராட்சத குழாய்கள் - அரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்டன


நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு 300 ராட்சத குழாய்கள் - அரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 2 Jun 2021 10:39 AM IST (Updated: 2 Jun 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்கு இரண்டாம் கட்ட பணிக்காக 300 ராட்சத குழாய்கள் அரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் முதல் ஆலையில் தற்போது தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு தென்சென்னை பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது தென் சென்னை பகுதிக்கு மேலும் குடிநீர் தேவை அதிகரிப்பால் தமிழக அரசு தற்போது உள்ள குடிநீர் ஆலைக்கு அருகில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.6 ஆயிரத்து 78 கோடி மதிப்பீட்டில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் புதிய ஆலையை அமைத்து வருகிறது.

இந்த புதிய குடிநீர் நீர் ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பகுதிக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட உள்ளன.

இதையடுத்து தற்போது முதல்கட்டமாக நெம்மேலி முதல் கோவளம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட குழாய் பதிக்கும் பணிக்காக கிழக்கு கடற்கரையில் இருந்து தென் சென்னைக்கு மேற் குறிப்பிட்ட பகுதிகள் வரை குடிநீர் கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை முன்மாதியாக கொண்டு பூமிக்கடியில் பதிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 2-ம் கட்ட பணிக்காக 12 மீட்டர் நீளமும் 2 மீட்டர் வட்ட அளவு கொண்ட 300 ராட்சத இரும்பு குழாய்கள் அரியானா மாநிலத்தில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை தெற்குப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு மைதானத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முட்டுக்காடு, கானத்தூர், உத்தண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 2-ம் கட்ட பணியின்போது இந்த குழாய்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பூமிக்கடியில் பதிக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட உள்ளன.

Next Story