மனைவியை அடித்ததாக பிரபல டி.வி. நடிகர் கரன் மெஹ்ரா கைது


மனைவியை அடித்ததாக பிரபல டி.வி. நடிகர் கரன் மெஹ்ரா கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 8:56 PM IST (Updated: 2 Jun 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை அடித்ததாக நள்ளிரவில் பிரபல டி.வி. நடிகர் கரன் மெஹ்ரா கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருபவர் பிரபல டி.வி. நடிகர் கரன் மெஹ்ரா(வயது38). இவரது மனைவி நிஷா ராவல்(40). இவரும் டி.வி. நடிகையாக உள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளான்.

சின்னத்திரை நட்சத்திர தம்பதியான இவர்கள் இடையே தகராறு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது மனைவியை கரன் மெஹ்ரா அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நிஷா ராவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். இது தொடர்பாக இரவு 11 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோரேகாவ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே நடிகரின் வீட்டுக்கு போலீசார் விரைந்தனர். நள்ளிரவில் நடிகர் கரன் மெஹ்ராவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரது மனைவி தன்னை அடித்ததாக கணவர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கரன் மெஹ்ரா மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை அவரை போலீசார் ஜாமீனில் விட்டனர். மனைவியை அடித்ததாக நள்ளிரவில் பிரபல டி.வி. நடிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நட்சத்திர தம்பதியான இவர்கள் பல்வேறு தொடர்களில் நடித்து உள்ளனர். ‘நச் பாலியே’ என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளனர்.


Next Story