தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது


தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 2 Jun 2021 10:10 PM IST (Updated: 2 Jun 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

புதுச்சேரி, 

புதுவையில் தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன்படி மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு நிறைவடைந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.

அதன்படி நேற்று முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் அத்தியாவசிய கடைகள் வழக்கம்போல் செயல்படும். இதுதவிர மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பிளம்பர், எலக்ட்ரீசியன், வாகன பழுது பார்ப்போர் ஆகியோர் தங்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று வீடுகளுக்கு நேரடியாக சென்று பழுதுநீக்கும் பணியை தொடங்கினர். பழுதான வாகனங்களை பொதுமக்கள் சீரமைத்தனர்.

இதற்காக மின்சாதன கடைகள், வாகன உதிரிபாக கடைகள் தூசிதட்டி திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை கடைக்காரர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று கொடுத்தனர்.

இந்தநிலையில் உதிரிபாக கடைகளை திறந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்து கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர். ஊரடங்கு தளர்வு காரணமாக புதுவையில் நேற்று மக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

Next Story