தேவையின்றி சுற்றி திரிந்தவர்களின் 69 வாகனங்கள் பறிமுதல்


தேவையின்றி சுற்றி திரிந்தவர்களின் 69 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:11 PM IST (Updated: 2 Jun 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

கீழையூரில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 69 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேளாங்கண்ணி;
கீழையூரில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 69 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
69 வாகனங்கள் பறிமுதல்
இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 24-ந்தேதி முதல் நேற்று வரை ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த வாகனங்கள் மீது கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி கீழையூர், மேலப்பிடாகை, திருப்பூண்டி, பிரதாபராமபுரம், விழுந்தமாவடி உள்ளிட்ட போலீஸ் சரகங்களில் மொத்தம் 69 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு முடிந்தபின் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story