நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு


நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jun 2021 10:38 PM IST (Updated: 2 Jun 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உழவர் சந்தை விலை
தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்ட போது முதல் கட்டமாக மே 31 வரை காய்கறிகள் மற்றும் பழங்களை வீதி வீதியாகக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் 168 நடமாடும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டது. பின்னர் 2 ம் கட்டமாக வரும் 7 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது இந்த பாஸை அனைவரும் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் இந்த பாஸை புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இதுவரை 63 விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் வாகனத்துக்கான பாஸை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.இதற்கு உழவர் சந்தை விலையைப் பொறுத்து அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். வாகனங்களில் விலைப்பட்டியல் ஒட்ட வேண்டும் என்பது போன்ற கண்டிப்பான உத்தரவுகளை வியாபாரிகள் விரும்பவில்லை என்று கூறப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேநேரத்தில் போலீசார் கெடுபிடி இல்லாததால் பாஸ் இல்லாமலேயே வியாபாரம் செய்யலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சமூக இடைவெளி
இந்தநிலையில் உடுமலை பகுதியில் சரியான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்களில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் விலைப்பட்டியல் இல்லாமல் காய்கறிகள் விற்பனை செய்தவர்களிடம் விலைப் பட்டியலை வழங்கி வாகனங்களில் ஒட்டச் செய்தனர். பட்டியலில் குறிப்பிட்ட விலையில் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அத்துடன் பாஸ் இல்லாமல் விற்பனை செய்தவர்களை எச்சரித்து பாஸ் வாங்கிக் கொள்ள வலியுறுத்தினர். மேலும் ஒரே இடத்தில் நின்று விற்பனை செய்யாமல் வீதி வீதியாகக் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்க அறிவுறுத்த வேண்டும் என்பதை விற்பனையாளர்களிடம் வலியுறுத்தினர்.

Next Story