விளைநிலங்களில் மண் பரிசோதனை


விளைநிலங்களில் மண் பரிசோதனை
x
தினத்தந்தி 2 Jun 2021 11:04 PM IST (Updated: 2 Jun 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வேளாண்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வேளாண்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தென்மேற்குப் பருவ மழை
விளைநிலங்களில் பயிர் மகசூலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மண் உள்ளது. மண்ணுக்கு ஏற்ற பயிரைத்தேர்வு செய்து மண்ணில் இல்லாத சத்துக்களை மட்டுமே வழங்கி சாகுபடி மேற்கொள்ளும்போது செலவு குறைவதுடன் நல்ல மகசூல் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள தற்போதைய நிலையில் தேவையற்ற உரங்களைத் தவிர்ப்பதற்கு மண் பரிசோதனை உதவுகிறது. தற்போது தென் மேற்குப்பருவமழை தொடங்க உள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று வேளாண்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-
மனிதர்களுக்கு ரத்தப்பரிசோதனையைப் போன்றது விளைநிலத்துக்கு மண் பரிசோதனையாகும். நோயைத் தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது தான் சிறந்த மருத்துவ முறையாகும். அதுபோல மண்ணின் தேவையை அறிந்து தேவையான ஊட்டம் வழங்குவது சிறந்ததாகும்.
ஊட்டச்சத்துக்கள்
பொதுவாக பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. தழை, மணி, சாம்பல் எனப்படும் பேரூட்டச்சத்துக்கள், சுண்ணாம்பு, கந்தகம், மெக்னீசியம் போன்ற 2 ம் நிலை பேரூட்டச்சத்துகள் மற்றும் இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்டினம், தாமிரம், போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவை பயிர்களுக்கு சரியான விகிதத்தில் தேவைப்படுகிறது. இன்றைய வேளாண்மையில் மகசூல் குறைவுக்கு மிக முக்கிய காரணங்களாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையாகும்.குறைவான மற்றும் சமச்சீரற்ற முறையில் சத்துக்கள் அளிப்பதும் மகசூல் இழப்புக்குக் காரணமாகிறது. 
எனவே தேவையான ஊட்டச் சத்துக்களை சரியான இடத்தில், சரியான நேரத்தில் இட்டு மண் மற்றும் பாசன மேலாண்மை உத்திகளை சரிவரக் கையாள்வது மகசூல் அதிகரிப்பின் மகத்தான உத்தியாகும்.எனவே மண் மாதிரிகளைச் சேகரித்து மண் பரிசோதனை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளின்படி என்னென்ன அளவுகளில் என்னென்ன உரங்கள் இட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகிறது.
மண் மாதிரிகள்
மண் பரிசோதனை மேற்கொள்ளும்போது மண் நயம், மின் கடத்து திறன், சுண்ணாம்புத் தன்மை, கார, அமில நிலை ஆகியவற்றை அறிய முடியும். இதனைப் பொறுத்து உர மேலாண்மை செய்து மண்ணிலுள்ள ஊட்டச் சத்து குறைபாடுகளைக் களையவும் மண் வளத்தை மேம்படுத்தி பயிரின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்கவும் முடியும். 
எனவே உடுமலை வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மண் மாதிரிகளைச்சேகரித்து விவசாயியின் பெயர், கிராமத்தின் பெயர், சர்வே எண், இதற்கு முன் சாகுபடி செய்த பயிர், இனி சாகுபடி செய்யப் போகும் பயிர், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். மண் பரிசோதனைக்கான மாதிரிகளுடன் ரூ.20 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பாலசுப்பிரமணியம் (உடுமலை-1) 9843900274, முருகானந்தம் (உடுமலை-2) 9486478420, அமல்ராஜ் (குறிச்சிக்கோட்டை) 9751293606, வைரமுத்து (வாளவாடி) 9865939222,மார்க்கண்டன் (சாளையூர்) 9894936328.

Next Story