புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Jun 2021 5:52 PM GMT (Updated: 2 Jun 2021 5:52 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ஜூன்.3-
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
தடுப்பு நடவடிக்கைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் பரவல் அதிகமாக உள்ளது. இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கி உள்ளது.  தினமும் 400-க்கும் மேல் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 350-க்கு கீழ் குறைந்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.
கலெக்டருக்கு கொரோனா
மேலும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா சிகிச்சைகளுக்கு துரித நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மாலைக்கு மேல் தொற்று உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில்...
புதுக்கோட்டையில் கடந்த 2 நாட்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் மற்றவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட கலெக்டருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

Next Story