சிவகங்கையில் தினசரி அதிகரித்தும், குறைந்தும் வரும் கொரோனா தொற்று


சிவகங்கையில் தினசரி அதிகரித்தும், குறைந்தும் வரும் கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 Jun 2021 11:23 PM IST (Updated: 2 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்தும், குறைந்தும் மாறி மாறி வருவதால் மக்கள் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டு்ம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்தும், குறைந்தும் மாறி மாறி வருவதால் மக்கள் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டு்ம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த மாவட்டத்தில் வசித்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தினமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
 கடந்த செப்டம்பர் மாதம் வரை பாதிப்பு இருந்த நிலையில் பின்னர் பாதிப்பின் அளவு குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த(மே) மாதத்தில் இருந்து கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர்,காரைக்குடியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி தொற்று விவரம்

சிவகங்கை மாவட்டத்திதை பொறுத்தவரை கடந்த மாதம் 7-ந்தேதியில் இருந்து கொரோனா பாதிப்பு அளவு தினசரி அதிகரித்து வந்தது.
7-ந்தேதியன்று 113 பேருக்கும், 8-ந்தேதி 136 பேருக்கும், 9-ந்தேதி 138 பேருக்கும் 10-ந்தேதி 196 பேருக்கும், 11-ந்தேதி 219 பேருக்கும், 14-ந்தேதி 242 பேருக்கும், 15-ந்தேதி 249 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தது.
 இந்த நிலையில் உச்சகட்டமாக கடந்த 25-ந்தேதி 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் தற்போது தொடர்ந்து கொரோனா பரவலின் வேகம் ஏற்றம், இறக்கம் உள்ளது.
இதன்படி 27-ந்தேதி 173 பேருக்கும், 28-ந்தேதி 214 பேருக்கும் 29-ந்தேதி 198 பேருக்கும், 30-ந்்தேதி 211 பேருக்கும், 31-ந்தேதி 181 பேருக்கும் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

2 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 180-ல் இருந்து 250-வரை கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜூன் 1-ந்தேதிவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 626 ஆகும். அதில் இதுவரை 12 ஆயிரத்து 616 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்ற மாவட்டநிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story