நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தகவல்


நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:39 PM IST (Updated: 2 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நுண்ணீர் பாசனம்
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இந்த ஆண்டு துவரை, பச்சை பயிறு, உளுந்து, காராமணி, நிலக்கடலை, தென்னை ஆகியவற்றை பயிர் செய்ய அரசு மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன வசதிகள் செய்து தரப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நீரின் பயன்பாடு 100 சதவீதம் பயிரின் வேர் அருகே கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனால் ஆவியாதல் மற்றும் நீர்க்கசிவு இன்றி பாசனம் செய்யப்படுவதால் குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்ய முடியும்.
மானியம்
நுண்ணீர் பாசன மானியத்திற்கு மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கியுள்ளன. இதன்மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு எக்டருக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும், தெளிப்பு நீர் பாசனத்துக்கு ரூ.19 ஆயிரத்து 500-ம், மழைத்தூவுவான் பாசனத்துக்கு ரூ.31 ஆயிரத்து 600-ம் மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது போட்டோ, விவசாய நிலத்தில் சிட்டா, அடங்கல், வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, கிணறு அல்லது ஆழ்துளை கிணற்றுக்கான சான்று, மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு முடிவு சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story