உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண்பது தொடர்பான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் 8,395 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மனுவின் உண்மை தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்து தகுதியுடைய நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிக முனைப்புடன் அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
அடிப்படை பணிகள்
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீடு, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புகள், புதிய வழித்தடங்களில் பஸ் வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை பணிகளை கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். இதேபோல் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், பழைய கட்டிடங்களை பழுதுபார்த்தல், தெரு விளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.
தனிநபர் மற்றும் சமுதாய கழிவறைகளை பயன்படுத்த பொதுமக்களை வலியுறுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவித்தொகை புதிய அடையாள அட்டை, ஸ்கூட்டர், 3 சக்கர வாகனம், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதியான நபர்கள்
மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். மனுக்களுக்கு தீர்வு காண கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மனுதாரரை தொடர்புகொண்டு தகவல்களை பெற்று ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தனித்துணை கலெக்டர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story