கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது


கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 2 Jun 2021 6:10 PM GMT (Updated: 2 Jun 2021 6:10 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. இதுவரை 965 பேர் பலியாகியுள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. இதுவரை 965 பேர் பலியாகியுள்ளனர்.
802 பேர் பாதிப்பு
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
நேற்று முன்தினம் ஒரே நாளில் 802 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் நெல்லை மாவட்டத்தையும், 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தையும், ஒருவர் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
பகுதிவாரியாக விவரம்
இந்த 802 பேரில் ஆண்கள் 392 பேரும், பெண்கள் 410 பேரும் அடங்குவர். இதில் 19 சிறுவர்களும் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக நாகர்கோவில் நகரில் 168 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 89 பேரும், கிள்ளியூர் பகுதியில் 76 பேரும், குருந்தன்கோடு பகுதியில் 95 பேரும், மேல்புறம் பகுதியில் 55 பேரும், முன்சிறை பகுதியில் 71 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 57 பேர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
இதேபோல் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 19 பேர் இறந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 965 ஆக உயர்ந்துள்ளது.

Next Story