போலி போலீஸ்காரர்கள் 4 பேர் கைது
பெங்களூருவில் தொழில் அதிபரை மிரட்டி ஸ்கூட்டர், பணம் பறித்த 4 போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் தொழில் அதிபரை மிரட்டி ஸ்கூட்டர், பணம் பறித்த 4 போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.
போலீஸ்காரர்கள் எனக்கூறி...
பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் அருகே வசித்து வருபவர் தபன் பிஸ்வாஸ். இவரது சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஆகும். தொழில் அதிபரான தபன் பிஸ்வாஸ், தச்சு தொழில் செய்து வருகிறார். தொழில் விஷயமாக வெளியே சென்று விட்டு தபன் பிஸ்வாஸ் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி கெங்கேரி அருகே நைஸ் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற 4 பேர், தபன் பிஸ்வாசை வழிமறித்து, தாங்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறியுள்ளனர். பின்னர் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக தபன் பிஸ்வாசை மிரட்டி அவரிடம் இருந்து ஸ்கூட்டரை வாங்கி கொண்டனர்.
2 நாட்கள் கழித்து பேடரஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்து அபராத தொகையை செலுத்திவிட்டு ஸ்கூட்டரை எடுத்து செல்லும்படி போலீஸ்காரர்கள் எனக்கூறிய 4 நபர்களும் தெரிவித்திருந்தனர்.
4 பேர் கைது
அந்த ஸ்கூட்டரில் தபன்பிஸ்வான் தனது ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, செல்போனை வைத்திருந்தார். அவற்றை கொடுக்கும்படி கேட்டும் 4 பேரும் கொடுக்க மறுத்திருந்தனர். இதையடுத்து, 2 நாட்கள் கழித்து பேடரஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று ஸ்கூட்டரை கொடுக்கும்படி தபன் பிஸ்வாஸ் கேட்டுள்ளார்.
அப்போது பேடரஹள்ளி போலீசார், அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்யவில்லை என்பதும், மர்மநபர்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறி ஸ்கூட்டர், ஏ.டி.எம். கார்டுவை பறித்திருப்பதும் தெரியவந்தது.
அதே நேரத்தில் தபன் பிஸ்வாசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.94 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்திருந்தார்கள். இந்த சம்பவம் நடந்த பகுதி கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், இதுபற்றி கெங்கேரி போலீஸ் நிலையத்தில் தபன் பிஸ்வாஸ் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கெங்கேரி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.
ரூ.94 ஆயிரம் எடுத்தனர்
கைதானவர்கள் சோலூர் பாளையாவை சேர்ந்த தபஸ்ராய் (வயது 24), பசவேசுவராநகரை சேர்ந்த சரத் ஷெட்டி (25), மூடல பாளையாவை சேர்ந்த பூர்விக்ராஜ் (21), மோகன்குமார் (24) என்று தெரிந்தது. இவர்களில் சரத் ஷெட்டி, பூர்விக்ராஜ் என்ஜினீயரிங் படித்துள்ளனர்.
மேலும் தபன் பிஸ்வாசிடம், தபஸ்ராய் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தபன் பிஸ்வாசிடம் ஏராளமான பணம் இருப்பதை அறிந்த அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த மாதம் 25-ந் தேதி நைஸ் ரோட்டில் தபன் பிஸ்வாஸ் வருவது பற்றி நண்பர்களுக்கு, தபஸ்ராய் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கைதான சரத் ஷெட்டி, பூர்விக்ராஜ், மோகன்குமார், மற்றொரு நபர் தங்களை போலீஸ்காரர்கள் எனக்கூறிக் கொண்டு தபன் பிஸ்வாசிடம் இருந்து ஸ்கூட்டரை பறித்ததுடன், அவரது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.10 ஆயிரம், வங்கி கணக்கில் இருந்து ரூ.84 ஆயிரத்தை 5 பேரும் எடுத்து பங்கு போட்டுக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.
வங்கி கணக்குகளுக்கு அனுப்பியதால்...
தபன் பிஸ்வாஸ் வங்கி கணக்கில் இருந்து கைதானவர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். இதனை ஆய்வு செய்த போது, 4 பேரின் வங்கி கணக்கு பணம் வந்திருப்பதற்கான ஆதாரத்தின் மூலம் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள்.
மேலும் நைஸ் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாகவும் 4 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தெரிவித்துள்ளார்.
கைதான 4 பேரிடம் இருந்து ஒரு ஸ்கூட்டர், 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.41 ஆயிரம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story