சிறுவன் உள்பட 4 பேர் கைது
தரிகெரேவில் டாக்டரை கொல்ல முயன்ற வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
சிக்கமகளூரு:
தரிகெரேவில் டாக்டரை கொல்ல முயன்ற வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
குழந்தைகள் நல சிறப்பு டாக்டர்
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியில் வசித்து வருபவர் தீபக். குழந்தைகள் நல சிறப்பு டாக்டர். இவர் தரிகெரே டவுன் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், டாக்டர் தீபக்கை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பல் டாக்டர் தீபக் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. மேலும் அவரை அந்த கும்பல் கத்தியால் குத்திவிட்டும், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டும் தப்பி ஓடிவிட்டது.
தீவிர சிகிச்சை
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாக்டர் தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் டாக்டர் தீபக்கிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும், அதன்காரணமாக அக்குழந்தையின் குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
4 பேர் கைது
இதையடுத்து தரிகெரே போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் தீபக்கை கொலை செய்ய முயற்சித்தது, சிகிச்சை பலனின்றி இறந்த குழந்தையின்
குடும்பத்தினரான தரிகெரே அருகே உள்ள அத்திகேநாலு கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்(வயது 24), வெங்கடேஷ்(23), மிதுன்(24) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது சிகிச்சை பலனில்லாமல் இறந்தது வேணுகோபாலின் அக்காள் மகனான 2 வயது குழந்தை என்பதும், குழந்தைக்கு டாக்டர் தீபக் மற்றும் கிளினிக்கில் இருந்த நர்சுகள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
அதன்பின்னர் டாக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story