நெல்லை சித்த மருத்துவமனையில் இருந்து தென்காசி மாவட்ட கொரோனா மையங்களுக்கு 20 டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்


நெல்லை சித்த மருத்துவமனையில் இருந்து தென்காசி மாவட்ட கொரோனா மையங்களுக்கு 20 டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 3 Jun 2021 1:13 AM IST (Updated: 3 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சித்த மருத்துவமனையில் இருந்து தென்காசி மாவட்ட கொரோனா மையங்களுக்கு 20 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை:
கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழக அரசு சில மாவட்டங்களை தேர்வு செய்து அங்கு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று அதிகமாக உள்ள தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் கொடிக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஆரம்ப கட்டத்தில் கொரோனா தொற்று லேசான அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். இந்த இரண்டு சிகிச்சை மையங்களிலும் முறையே சுமார் 75 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று 20 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பட்ட மேற்படிப்பு முடித்த 10 டாக்டர்களும், பயிற்சி முடித்த டாக்டர்கள் 10 பேரும் அடங்குவர். இவர்களை சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் திருத்தணி, துணை முதல்வர் சவுந்தரராஜன், உறைவிட மருத்துவர் ராமசாமி ஆகியோர் அனுப்பி வைத்தனர். இவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒரு வாரத்திற்கு ஒரு குழுவினர் பணியாற்றுவார்கள் எனவும், தற்போது நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மொத்தமுள்ள 200 படுக்கைகளில் 38 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர் திருத்தணி தெரிவித்தார்.

Next Story