இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை: கொரோனா தடுப்பூசி குழுவை கண்டு ஓட்டம் பிடித்த மலைவாழ் மக்கள்; வீடு, வீடாக சென்று ஊசி போட கலெக்டர் அறிவுரை
இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி குழுவை கண்டு மலைக்கிராம மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் வீடு, வீடாக சென்று ஊசி போட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
திருச்சி,
இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி குழுவை கண்டு மலைக்கிராம மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் வீடு, வீடாக சென்று ஊசி போட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கிராமங்களில் தடுப்பூசி
நகர்ப்புறங்களை விட கிராம புறங்களில்தான் கொரோனா தொற்று தற்போது வேகமெடுத்துள்ளது. எனவே, திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை குழுவினர் கொரோனா தடுப்பூசி உபகரணங்களுடன் சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிலும் மலைக்கிராமங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மலைப்பகுதியில் 16 கிராமங்கள் உள்ளன. அங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 800 பேர் 45 வயதை கடந்தவர்கள்.
குழுவை கண்டு ஓட்டம்
இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த 170 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் பச்சமலைப்பகுதியில் உள்ள சேம்பர் கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சம்பத் தலைமையிலான மருத்துவ குழுவினர் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்துவதற்காகவும், தடுப்பூசி போடுவதற்காகவும் அங்கு சென்றனர்.
அங்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். பெரும்பாலான வீடுகளில் மக்கள், மருத்துவ குழுவை கண்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவார்கள் என பயந்து குழந்தைகளுடன் வயல்களுக்கும், வனப்பகுதிக்கும் தப்பிச்சென்று விட்டதை அறிந்த மருத்துவ குழு அதிர்ச்சிக்குள்ளானது.
மீண்டும் முகாம்
இதுபோன்று அந்த மலைக்கிராமத்தில் தடுப்பூசி போடுவதற்கும் பழங்குடி மக்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த 2 வாரத்தில் இதுவரை 225 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக அங்குள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெற்றது. திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குனர் ராம்கணேஷ் மேற்பார்வையில் உப்பிலியபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வீடு, வீடாக சென்று தடுப்பூசி
இதற்காக 250 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படும். இறந்துவிடுவோம்’ என்று மலைவாழ் மக்களிடையே ஏற்பட்ட வதந்தி காரணமாக 19 பேர் மட்டுமே நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பலர் தடுப்பூசி குழுவினரை கண்டதும் ஓட்டம் பிடித்தபடி தோட்டங்களுக்கு சென்றும், வனப்பகுதிக்குள் சென்றும் மறைந்து கொண்டனர்.
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு டாப் செங்காட்டுப்பட்டிக்கு நேரில் சென்று முகாமை ஆய்வு செய்தார். அப்போது 19 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு முகாம் நேரம் முடிந்ததும், தன்னார்வலர்களின் உதவியுடன் ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று, தகுதி உள்ள அனைத்து மலைவாழ் மக்களுக்கும் தடுப்பூசி போட அவர் அறிவுறுத்தினார். அதன்படி 3 குழுவினர் நேற்று மாலை மலைக்கிராமங்களுக்கு தடுப்பூசி போடச்சென்றனர். அப்போது இரவு 7 மணி வரை 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 வாரத்தில் 225 பேருக்கு மட்டுமே தடுப்பூசி-டாக்டர் வேதனை
பச்சைமலை செங்காட்டுபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் கூறும்போது, “காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசியின் பயன்கள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பரிசோதனைக்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் பழங்குடி மக்கள் தயங்குகிறார்கள். கடந்த 2 வாரத்தில் மலைக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் 45 வயதை கடந்தவர்கள் 200 பேர், 18 முதல் 44 வயதுக்குள்ளானவர்கள் 25 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மக்கள் முகாம்களுக்கு வராததால் மருத்துவ குழுவினர் சென்று வீட்டு கதவை தட்டினர். ஆனால், அதற்கும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நாம் பேசுவதை செவிமடுத்து கேட்காமல் வயல்களுக்கே ஓடினர். தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும். இறப்பு ஏற்படும் என கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்' என்றார்.
Related Tags :
Next Story