மழைநீர் வழித்தடங்குகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


மழைநீர் வழித்தடங்குகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2021 2:38 AM IST (Updated: 3 Jun 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெல்லை கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தினார்.

நெல்லை:
தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நெல்லை மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை மற்றும் இயற்கை இன்னல்கள் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க பள்ளி, சமுதாய கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சி, காவல் துறை, தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, மருத்துவ மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்த தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் உதவி கலெக்டர் தலைமையில் மண்டல குழுக்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பேரிடர் சமயங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முழுவதுமாக பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழை நீர் வழித்தடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மழைநீர் வெள்ளம் தங்குதடையின்றி செல்வதற்கு வழிவகை செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீரை முடிந்த அளவு அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் சேமிப்பதற்கு தன்னார்வலர்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கனரக எந்திரங்கள் மற்றும் கருவிகள், நீர் வெளியேற்றும் மோட்டார் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

விவசாயிகள் தேவையான உரம், மருந்து போன்றவற்றை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலவேம்பு, கபசுர குடிநீர் போன்றவற்றை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story