மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 4:01 AM IST (Updated: 3 Jun 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
டெல்டா பாசனம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் மாதம் 90 அடியாக இருக்கும்போது பருவமழை நன்றாக பொழிய வாய்ப்புள்ளது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
திறக்கப்படுமா?
இந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதியான நேற்று அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக இருந்தது. ஆகவே இந்த ஆண்டும் பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும் எனில் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஜூன் 12-ந் தேதி திறந்து விடப்படும் தண்ணீர் ஜனவரி 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு திறந்து விடப்படும். பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ தண்ணீர் திறந்து விடப்படும். ஆகவே இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என தமிழக  விவசாயிகள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
நீர்மட்டம்
இந்தநிலையில் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 684 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Next Story