சேலத்தில் 2-வது நாளாக தீவிர வாகன தணிக்கை: ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் நடவடிக்கை
சேலத்தில் 2-வது நாளாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்:
சேலத்தில் 2-வது நாளாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
வாகன தணிக்கை
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. எனவே ஊடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாநகரில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வந்த வாகன ஓட்டிகளை போலீசார் வழிமறித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
அடையாள அட்டை
இந்தநிலையில், போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் சேலத்தில் நேற்று 2-வது நாளாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மரவனேரி மற்றும் வின்சென்ட் ரோடு, செரி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்வதாக கூறியவர்களை மட்டுமே போலீசார் விடுவித்தனர். அதேசமயம் வங்கி மற்றும் அரசு பணிக்கு செல்லக்கூடிய ஊழியர்கள், போலீசாரிடம் அதற்கான அடையாள அட்டையை காண்பித்து விட்டு சென்றனர்.
அபராதம்
அப்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஊரடங்கு முடியும் வரை தயவுசெய்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டனர். அதைப்போல் கலெக்டர் அலுவலகம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, திருவள்ளுவர் சிலை அருகில், அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் முக்கிய பிரதான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலைகள் மற்றும் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர். சேலம் மாநகரில் நேற்று ஒரே நாளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story