கூடலூர் அருகே தேவர்சோலை பஜாருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு


கூடலூர் அருகே தேவர்சோலை பஜாருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 6:55 AM IST (Updated: 3 Jun 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தேவர்சோலை பஜாருக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மலைபிரதேசமான நீலகிரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருகின்றன. 

இந்த நிலையில் கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் உள்ள தேவர்சோலை பஜாருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் சமுதாயக்கூடம் வழியாக கூடலூர் செல்லும் சாலையில் நடந்து சென்றது.

 சத்தம் கேட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது சாலையில் நடந்தவாறு சென்ற காட்டு யானை தனியார் தோட்டத்துக்குள் சென்றது.  இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோடைகாலத்தில் வறட்சி நிலவியதால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விவசாய பயிர்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வந்தன. தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி விட்டது. மேலும் சில வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி உள்ளன. 

இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து விட்டது. இதனால் வனப்பகுதியொட்டி வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story