புதுச்சத்திரம் அருகே ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு
புதுச்சத்திரம் அருகே ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. எனவே ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி உள்ளன.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் புதுக்குடியில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 3¼ டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு நேற்று டேங்கர் லாரி ஒன்று நாமக்கல் வழியாக சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை கோவை அரசலூரை சேர்ந்த ஸ்டீபன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார். புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி மேம்பாலத்தில் லாரி சென்றபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய டேங்கர் லாரி மேம்பாலத்தில் இருந்து 10 அடியில் உள்ள சர்வீஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பரபரப்பு
மேலும் கவிழ்ந்த வேகத்தில் லாரியின் டேங்கில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் கசிவை தடுத்து கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேலத்தில் இருந்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, அந்த ஆக்சிஜன் வேறு லாரிக்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story