கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்கு பிறகு தடுப்பூசி போடவேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்கு பிறகு தடுப்பூசி போடவேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jun 2021 7:22 PM IST (Updated: 3 Jun 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்கு பிறகு தான் தடுப்பூசி போடவேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் (நோய் தடுப்பு), அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் தற்போது கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களில் பின்வரும் திருத்தங்களை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து 3 மாதத்திற்கு பிறகு தான் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தொடர்பாக எந்த சிகிச்சை எடுத்து கொண்டாலும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸ் போட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்கள் கடந்த பிறகே 2-வது டோஸ் போட வேண்டும்.

வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றாலும் 4 அல்லது 8 வாரங்கள் கழித்த பிறகு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரேபிட் டெஸ்ட் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story