மண்டியா, குடகில் உள்ள 12 ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.1.40 கோடி மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய இந்திய வம்சாவளி டாக்டர்
மண்டியா, குடகில் உள்ள 12 ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.1.40 கோடி மருத்துவ உபகரணங்களை அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
மண்டியா,
கர்நாடகத்தில் கடந்த மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 14 ஆயிரம் என்ற நிலைக்கு வந்து உள்ளது. ஆனாலும் உயிரிழப்புகள் தினமும் 400-க்கு மேல் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் ரூ.1.40 கோடிக்கு மருத்துவ உபகரணங்களை கர்நாடகத்தில் உள்ள 2 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நன்கொடையாக கொடுத்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் விவேக் மூர்த்தி. இவரது பெற்றோர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கல்லகெரே கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த விவேக் மூர்த்தியின் பெற்றோர் அங்கேயே வசித்து வருகிறார். விவேக் மூர்த்தி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்த போது, அமெரிக்க சுகாதாரத்துறையில் விவேக் மூர்த்தி முக்கிய பொறுப்பில் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் விவேக் மூர்த்தி தனது ஸ்கோப் பவுன்டேசன் மூலம் மண்டியா, குடகில் உள்ள 12 அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரண பொருட்களை நன்கொடையாக கொடுத்து உள்ளார். அதாவது 70 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 25 வெப்ப பரிசோதனை கருவி, 1 லட்சத்து 96 ஆயிரம் கே.95 முகக்கவசம், முகத்தை முழுவதுமாக மறைக்கும் 5 ஆயிரம் முகக்கவசம், 400 கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரண பொருட்களை விவேக் மூர்த்தி கொடுத்து உள்ளார். இந்த மருத்துவ உபகரண பொருட்களை குடகு, மண்டியாவில் உள்ள 12 ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story