200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்


200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 3 Jun 2021 9:11 PM IST (Updated: 3 Jun 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

விருதுநகர்,ஜூன்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
சிகிச்சை மையம்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் 1500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் பாதிப்படைந்தோரை 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும், அறிகுறிகளுடன் இருந்தாலும் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் குணமான பின்னர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 
புதிய சிகிச்சை மையம்
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 18 சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தார். இந்த சிகிச்சை மையத்தை குறுகிய காலத்திலேயே அமைக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த சிகிச்சை மையத்தை ஒரு வார காலத்தில் அமைத்துள்ளது.
இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் இங்கு தங்கி சிகிச்சை பெறுவோருக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்படுவார்கள். மேலும் அவசியம் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்களும் வந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 
திறந்து வைக்கிறார்
இந்த சிகிச்சை மையத்தை இன்று சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து இந்த மையத்தில் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.
இதையொட்டி நேற்று கலெக்டர் கண்ணன் இம்மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுபவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story