அன்னவாசல், கீரனூர், கறம்பக்குடி, இலுப்பூரில் 2,250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


அன்னவாசல், கீரனூர், கறம்பக்குடி, இலுப்பூரில் 2,250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:03 PM IST (Updated: 3 Jun 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல், கீரனூர், கறம்பக்குடி, இலுப்பூரில் 2,250 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அன்னவாசல், 

அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயஸ்ரீ, நாகராஜன் தலைமையிலான போலீசாருக்கு மழவராயன்பட்டியில் உள்ள வயல்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக புகார்கள் வந்ததையடுத்து அங்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இருந்த 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அன்னவாசல் அருகே உள்ள பாசிப்பட்டியில் உள்ள பாசிகுளப்பகுதியில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு 100 லிட்டர் சாராய ஊறல் ேபாடப்பட்டு இருந்தது. அதனையும் அவர்கள் கைப்பற்றி அழித்தனர்.

இதேபோல் கீரனூரை அடுத்த உடையாளிப்பட்டி அருகே ஆரணி பட்டி கிராமத்தில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக கீரனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் முத்தழகு (60) என்பவரின் வீட்டு அருகே 150 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ேபாலீசார் அதனை கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் முத்தழகு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதேபோல மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று மதயானைபட்டி, கலிமங்களம், வில்லாரோடை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதயானைபட்டியை சேர்ந்த ரவி (25), ஆல்பர்ட் (35) ஆகியோர் கடையின் பின்புறம் சாராய ஊறல் போட்டு இருந்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து சாராய ஊறை அழித்தனர். பின்னர் இருவரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் சூரக்காடு அருகே உள்ள கருப்ப கோன்தெரு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் 300 லிட்டர் சாராய ஊறல் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த சாராய ஊறலை கைப்பற்றி வருவாய்த்துறையினர் முன்னிலையில் அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர் அருகே உள்ள நகரம் கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பழனியாண்டி என்பவர் 1,500 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் 1,500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றியும் விற்பனைக்காக வைத்திருந்த 30 லிட்டர் சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர். இதுகுறித்து பழனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோன்று இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் தீத்தான் பண்ணையில் சந்துரு என்பவர் வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story