நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தகவல்


நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2021 4:53 PM GMT (Updated: 3 Jun 2021 4:53 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

70 சதவீதம் நீர் சேமிப்பு

தமிழகத்தில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த சூழலில் நிலத்தடி நுண்ணீர் பாசனம் என்பது விவசாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 
எனவே விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் மூலம் குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் பயிர் செய்யலாம். இதன் மூலம் 70 சதவீதம் நீரை சேமிக்கலாம். தண்ணீர் தேவையான நேரத்தில் தேவையான அளவு செடிகளின் வேர்களுக்கு அருகாமையில் விழுவதால் தேவையற்ற களைகள் வராமல் தடுக்கப்படுவதோடு மண் இறுக்கம் குறைந்து மகசூல் அதிகரிக்கிறது.

வருமானம் அதிகரிப்பு

மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனத்தில் கரைத்து இடுவதால் உரம் வீணாகாமல் பயிருக்கு கிடைத்து உரச்செலவு குறைகிறது. நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரமிடுதல் ஆகிய வேலைகளில் ஆள் கூலி மிச்சப்படுவதால் விவசாய முட்டுக்கூலி செலவு குறைந்து விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது. 
சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை தூவான் உள்ளடக்கிய நுண்ணீர் பாசனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திற்காக 100 சதவீத மானியமும், 12.5 ஏக்கர் வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது.

ரூ.28 கோடி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் 14 ஆயிரத்து 375 ஏக்கரில் நுண்ணீர் பாசனம் செயல்படுத்திட ரூ.28 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. 
விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறு, குறு விவசாயியாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றுடன் தங்களது பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி நுண்ணீர் பாசனம் அமைத்து விவசாயத்தில் அதிக லாபம் பெற்று தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story