காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் சேதமடைந்த கரைகளை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் சேதமடைந்த கரைகளை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jun 2021 10:26 PM IST (Updated: 3 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.

தஞ்சை,

கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்:- இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். மேட்டுகட்டளை வாய்க்காலில் இருந்து முதலை முத்துவாரி ஏரி வரை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் முதலில் முத்துமாரி ஏரியை தூர்வார வேண்டும்.

அகில இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் ஜீவக்குமார்:- கடைமடை வரை தண்ணீர் சென்றடைய கல்லணை தலைப்பு பகுதியில் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் கரைகள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை சரிசெய்து கரையை பலப்படுத்த வேண்டும்.

திருப்பூந்துருத்தி சுகுமாரன்:- ஆறுகளில் மணல் அதிகளவில் அள்ளப் பட்டதால் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனை அகற்ற வேண்டும். ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் அதிக அளவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரத்தநாடு மாரியப்பன்:- வடகாடு வாய்க்காலில் கஜா புயலின் போது விழுந்த தென்னை மரங்கள் இன்னும் ஆங்காங்கே அகற்றப்படாமல் கிடக்கிறது அதனை அகற்ற வேண்டும். விவசாயத்துக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

திருவோணம் விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை:- தூர்வாரும் பணிகள் தொடங்குவதற்கு முன்பே விவசாயிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தி பணிகளை தொடங்க வேண்டும். ஆனால் தற்போது பணிகளைத் தொடங்கி விட்டு கலந்துரையாடல் நடத்துகிறீர்கள்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அம்மையகரம் வாய்க்காலை தலைப்பு பகுதியில் இருந்து இறுதி வரை முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மதுக்கூர் சுரேஷ்:- நீர் வரத்து வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். பெரிய கோட்டை ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது அந்த ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.

பட்டுக்கோட்டை வீரசேனன்:- ஆறுகளில் நாணல்கள் அதிக அளவில் படர்ந்துள்ளது. நாணல்களை அழிக்கும் வகையில் மருந்துகளை தெளிக்க வேண்டும். தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடத்தில் அந்தப் பணிகளின் தூரம் அதன் மதிப்புத் தொகை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும்.

பேராவூரணி நீலகண்டன்:- மழை காலங்களில் தரைமட்ட பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்கவாட்டில் தடுப்புகள் அமைத்து பாலத்தை உயர்த்திக் கட்ட வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர அதிக அளவில் பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும். பேராவூரணி பகுதியில் 118 குளம் உள்ளது இதில் 50 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளன இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Next Story