வாலாஜாவில் ஆயுர்வேத முக கவசம் தயாரித்து வழங்கும் என்ஜினீயரிங் மாணவர்
ஆயுர்வேத முக கவசங்களை தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கி வருகிறார் வாலாஜாவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்.
வாலாஜா
16 மூலிகைகளால் ஆன முக கவசம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நாகய்யாசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சஜீத் (வயது 19). இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். ரசாயன பொறியியல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது, கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சஜித் வீட்டில் உள்ளார்.
இவர், சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஆயுர்வேத முறையில் புதிய முக கவசத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதற்காக பல புத்தகங்களை படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு, இறுதியில் சுவாசக் கோளாறுகளை நீக்கும் அதிமதுரம், சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்பட 16 வகையான மூலிகைகளை கொண்டு ஆயுர் வேத முககவசங்களை தயாரிக்க முடிவு செய்தார்.
ஆன்டிவைரல் ஆக்டிவிட்டி சான்று
அதன்படி, சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகளை நாட்டு மருந்துக்கடைகளுக்கு வழங்கும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து தேவையான மூலிகைகளை வாங்கி, அதை வைத்து குறைந்த அளவிலான முகக் கவசங்களை தயாரித்து சவுத் இந்தியன் டெக்ஸ்டைல்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு சோதனைக்காக அனுப்பி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் வரையறையின் படி 20 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டருக்கு குறைவாக உள்ள முகக் கவசங்கள் பொதுமக்கள் அணிய ஏற்றது எனவும், தான் தயாரித்த முகக் கவசம் 7.659 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டர் புள்ளிகளை பெற்றுள்ளதாகவும், இது என்-95க்கு இணையான புள்ளிகள் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த முககவசம் 88.82 சதவீத ஆன்டிவைரல் ஆக்டிவிட்டி என சான்று பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது, முககவசம் தயாரிக்க முறையான ஆவணங்களை ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட இளைஞர், ஆயுர்வேத முறையில் முகக் கவசங்களை தயாரிக்க தொடங்கி உள்ளார்.
15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்
தனது தந்தையின் உதவியோடு வீட்டில் உள்ள சஜீத், கடந்த 2 மாதங்களாக ஆயுர்வேத முகக் கவசங்களை அதிகளவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் என கொரோனா நேரத்தில் பணியாற்றுவோருக்கு நாள்தோறும் இலவசமாகவும் முகக் கவசங்களை வழங்கி வருகிறார்.
துணியாலான இந்த முகக்கவசத்தில் மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி மூக்குக்கு அருகில் வைக்கப்படுகிறது. இந்தக் குப்பியில் நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும்போது இருமல், சளி, கபம், தொண்டை வலி உள்பட சுவாசக் கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும், சுவாசிக்க எளிமையாக உள்ளதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் சுவாசக்கோளாறு இன்றி இந்த முகக் கவசத்தை அணியலாம் என்றும் சஜீத் தெரிவித்தார்.
மேலும் முகக் கவசத்தை துவைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும், அதில் உள்ள 16 வகை மூலிகைப் பொருட்களை வீணாக்காமல் ஆவி பிடிக்க பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மாணவர் சஜீத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story