மண்டைக்காடு கோவிலில் தங்க மேற்கூரை அமைக்க வேண்டும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், தங்க மேற்கூரை அமைக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், தங்க மேற்கூரை அமைக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
மண்டைக்காடு கோவிலில் தீ
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள், அம்மனுக்கு சாத்தப்படும் துணிகள் போன்றவை எரிந்து நாசமாகின.
இந்தநிலையில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு வந்து, தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
பரிகார பூஜை தவறானது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். இதனால் மக்கள் மனம் புண்பட்டு உள்ளது. இந்த கோவில் கேரள மாநில ஆகம விதிகளுக்கு உட்பட்டது என்பதால் விபத்து நடந்த அன்றே செய்த பரிகார பூஜை தவறானது.
கேரள நம்பூதிரிகளை கொண்டு தேவ பிரசன்னம் பார்த்து பரிகார பூஜைகள் நடத்த வேண்டும். தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க மேற்கூரை
கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். தீயில் எரிந்த மேற்கூரையை சீரமைக்கும்போது தங்க தகடுகளால் மேற்கூரை பதிக்க வேண்டும். இது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தமிழக அரசு உடனே இதை நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கோவில்கள் உள்ளன. அவற்றை அரசு பாதுகாக்க வேண்டும். இனிமேல் எந்த கோவில்களிலும் இதுபோன்ற தீ விபத்துகள் நடக்க கூடாது. இந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்.
மண்டைக்காடு கோவில் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துவதும், அதற்கான விசாரணை அறிக்கைகளும் பக்தர்களுக்கு தெரியும்படி வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமில்லாமல் செயல்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பா.ஜனதா மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், கோட்டமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்.ரெத்னமணி, செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், இந்து கோவில் கூட்டமைப்பு துணைத்தலைவர் வேல்தாஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் பிரபு, ஒன்றிய செயலாளர் அய்யப்பன், மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட எஸ்.சி.அணி தலைவர் கதிரேசன், குளச்சல் நகர தலைவர் கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story