கொரோனாவால் இறந்த பெண் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு


கொரோனாவால் இறந்த பெண் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 11:33 PM IST (Updated: 3 Jun 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்

சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்.
கொரோனாவால் இறப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜன். கொத்தனார். இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள். 
திருமணமான மகள் கீதா காரைக்குடி சிக்ரியில் செவிலியராக பணி புரிகிறார். இந்தநிலையில் அமிர்தவள்ளிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிக்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார். 
எதிர்ப்பு
இதைதொடர்ந்து அவரது உடலை அரசினம்பட்டி கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த தகவல் அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், கொரோனா தொற்றால் இறந்த அமிர்தவள்ளி உடைலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
மேலும் கிராமத்திற்குள் உடலை கொண்டு வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் விைரந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
மேலும் இறந்த அமிர்தவள்ளியின் மகளான கீதாவையும் சமரசப்படுத்தினர். இதைதொடர்ந்து அமிர்தவள்ளியின் உடலை ஊருக்குள் கொண்டு செல்லாமல் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த மயானத்தில் ஆழமாக தோண்டி அதிகாரிகள் முன்னிலையில் புதைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story