மழையால் சேதமடைந்த குளங்கள் ரூ.4½ கோடியில் சீரமைக்கப்படும்


மழையால் சேதமடைந்த குளங்கள் ரூ.4½ கோடியில் சீரமைக்கப்படும்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:39 PM IST (Updated: 3 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குளங்கள் ரூ.4.55 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்:
குமரியில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குளங்கள் ரூ.4.55 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே உள்ள தேரூர் குளம் உள்பட பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவரது அறிவுறுத்தலின்படி சேத மதிப்பு குறித்த வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேரூர் குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-
தேரே கால்வாய்
தாழக்குடி கிராமம் பழையாற்றில் 6 - வது அணைக்கட்டான வீரநாராயணமங்கலம் அணைக்கட்டில் இடதுபக்க கரையில் தேரேகால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் வெள்ள பெருக்கினால் சேதமடைந்துள்ள தலைமதகு சட்டர், பாசன மதகுகள் சரிசெய்திடவும், கால்வாயின் கரைப்பகுதிகளை சரி செய்திட ரூ.40 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. 
குமரியில் பெய்த கனமழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேரேகால்வாயில் பெருவெள்ளம் புகுந்து தத்தையார்குளம், மாணிக்கப்புத்தேரிகுளம் மற்றும் தேரூர் குளத்தில் முழு கொள்ளளவை எட்டியது. தேரூர் குளத்தின் மிகைநீர் வழிந்தோடி பழையாற்றில் கலந்து வருகிறது.
ரூ.4.55கோடி சிறப்பு நிதி
வெள்ள பெருக்கினால் சேதமடைந்துள்ள தேரேகால்வாய், தத்தையார்குளம், மாணிக்கபுத்தேரிகுளம், தேரூர்குளம் மற்றும் உபரிநீர் கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு ெசய்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் வெள்ளபெருக்கில் சேதமடைந்த குளங்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும். 
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 
இந்த ஆய்வின்போது மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு) சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி பொறியாளர் ரமேஷ் ராஜன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story