கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக பூட்டியே கிடக்கும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படுமா?
கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக பூட்டியே கிடக்கும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
சட்டமன்ற அலுவலக கட்டிடம்
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அரசு அலுவலக கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற அலுவலக கட்டிடம் பல லட்சம் செலவில் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள காகாவாடி அருகே கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அந்த கட்டிடம் திறக்கப்படாமல் அப்படியே பூட்டியே கிடக்கிறது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பல அரசு அலுவலக கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில் சட்டமன்ற அலுவலக கட்டிடத்தை வேறு ஏதேனும் அரசு அலுவலக கட்டிடமாக பயன்படுத்த வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக பயன்படுத்த திறக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
60 கிலோ மீட்டர் தூரம்
இந்த சட்டமன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டும் என்றால் கரூர் பஸ் நிலையம் வந்து பின்பு அங்கிருந்து பஸ் பிடித்து சட்டமன்ற அலுவலகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கடவூர் மற்றும் தரகம்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வர வேண்டும் எனறால் 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story