குமாரபாளையத்தில் ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா நடிகர், கல்லூரி பேராசிரியர் கைது


குமாரபாளையத்தில் ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா நடிகர், கல்லூரி பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 12:01 AM IST (Updated: 4 Jun 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி

குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சினிமா நடிகர் மற்றும் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டனர்.
போலீசில் புகார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பி.எட். கல்லூரி எதிரில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் பக்கமுள்ள சடையம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கதிரவன் (வயது 40). இவர் திருப்பூரை சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளாக சடையம்பாளையம் பகுதியில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து தங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
துணை நடிகர்
அதே பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (65). பஸ் டிரைவர் மற்றும் திரைப்பட துணை நடிகர். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களிடம் ஒருவர் 500 ரூபாய் செலுத்தினால் ஆன்லைன் மூலம் தினசரி 36 ரூபாய் வட்டியாக கிடைக்கும் என்றும், பல மடங்கு தொகை செலுத்தினால் அதற்கேற்ப வட்டி கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினார்கள்.
இவர்களது ஆசைவார்த்தையை நம்பி சடையம்பாளையம், காந்தி நகர், காமராஜ் நகர், குமாரபாளையம் உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான பேர் பணம் செலுத்தினர். இப்படி பல லட்சம் ரூபாய் வசூலித்தனர். நானும் ரூ.30 ஆயிரத்தை இவர்களிடம் கொடுத்தேன். 10 நாட்கள் வட்டி வந்தது. அதன்பின் வரவில்லை.
மோசடி
இவர்களிடம் கேட்டால் அந்த நிர்வாகத்தைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டார்கள். என்னைப்போலவே பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து உள்ளார்கள்.
மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கைது
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
போலீசார் விசாரணையில், முதற்கட்டமாக 7 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கதிரவன் மருந்தாளுநர் படிப்பில் பி.எச்டி. படித்து கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது தெரியவந்தது.
 மதன்குமார், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் குமாரபாளையம் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அவ்வப்போது பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story