காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 78 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்- கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி
காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 78 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.
திருச்சி,
காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 78 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.
தூர்வாரும் பணி
காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை எளிதாக செல்வதற்கு வசதியாக கிளை வாய்க்கால்கள், ஓடைகள், ஏரிகள் ஆகியவற்றை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தூர் வார வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் 589 பணிகள் 3,859 கி.மீ. தூரத்திற்கு ரூ.62 கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரப்பட இருக்கின்றன.
திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் 106 பணிகள் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் 347 கி.மீ.தூரத்திற்கு தூர்வாரப்பட இருக்கின்றன. இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பரவன் ஓடை தூர்வாரும் பணியையும், திருவெறும்பூர் தாலுகா நவல்பட்டு கிராமத்தில் காட்டாறு தூர்வாரும் பணியையும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
78 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி
காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கு வசதியாக இந்த பணிகள் ஏ.பி. சி. என மூன்றாகப் பிரிக்கப்பட்டு தரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கடைமடை பகுதிவரை தண்ணீர் எளிதாகக் கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கு பாசனத்தில் பிரச்சினை இருக்காது.
இந்த ஆண்டு டெல்டா பகுதியில் 78 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதற்காக விவசாயிகள் நான்காயிரம் ஏக்கரில் நாற்றங்கால் அமைத்து தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 40 ஆயிரம் ஏக்கரில் தயார் செய்ய உள்ளனர். குறுவை சாகுபடிக்கு தேவையான எந்திரங்கள் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தூர்வாரும் பணிகளில் எங்காவது பிரச்சினை இருந்தால் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அல்லது எனக்கு நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கட்டுமான பணி திட்டமிட்டபடி நடந்து வருகிறது. அந்த பணிகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் நிறைவடையும்.
இவ்வாறு அவா் கூறினார்.
காணொலி மூலம்...
முன்னதாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சந்தீப் சக்சேனா, திருச்சி, கரூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். இதில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நடுக்காவேரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம், செயற்பொறியாளர்கள் சரவணன், ஆசைத்தம்பி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story