5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது


5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது
x
தினத்தந்தி 3 Jun 2021 6:59 PM GMT (Updated: 3 Jun 2021 6:59 PM GMT)

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஆக்சிஜன் உதவியுடன் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கொரோனா நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் 3 நாட்களுக்கு ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தீர்ந்து விடுகிறது. அதனால் மூன்று நாளைக்கு ஒருமுறை தொட்டியில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் ஆலையில் இருந்து லாரி மூலம் நேற்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த லாரியில் இருந்து 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தொட்டியில் நிரப்பப்பட்டது.

Next Story