ஏரியில் திரண்டு மீன் பிடித்த மக்கள்
நக்கம்பாடியில் ஏரியில் திரண்டு மீன் பிடித்த மக்களை போலீசார் விரட்டினர்.
செந்துறை:
மீன்பிடி திருவிழா
கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே வருவது, சமூக இடைவெளியின்றி கூடுவது போன்றவற்றை தவிர்ப்பதற்காக தளர்வில்லா முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது நக்கம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் நீரை நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வது வழக்கம். மேலும் சம்பா, குறுவை சாகுபடி முடிந்தால் மீன்பிடி திருவிழா நடப்பதும் வழக்கம்.
ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்
ஆனால் தற்போது முழு ஊரடங்கு நடைமுடையில் உள்ளதால் மீன்பிடிக்க அனுமதியில்லை. இந்நிலையில் நேற்று நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நம்மங்குணம், செந்துறை ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க நேற்று ஏரியில் இறங்கினர். தடையை மீறியும், சமூக இடைவெளியின்றியும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து, அங்கிருந்தவர்களை விரட்டினர். இதையடுத்து பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story