கொரோனா தடுப்பூசி முகாம்களில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஏராளமானோர் திரண்டனர். போதுமான மருந்து இல்லாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஏராளமானோர் திரண்டனர். போதுமான மருந்து இல்லாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
16,000 டோஸ் மருந்து
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 44 வயது வரை ஒரு பிரிவாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடக்கிறது.
மாநில அளவில் தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்திற்கு 14,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2000 டோஸ் ேகாவேக்சின் தடுப்பூசியும் வந்தன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள நகர்நல மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.
சிறப்பு முகாம்கள்
இதையடுத்து மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், வல்லன்குமாரன் விளையில் உள்ள அரசு பள்ளியிலும் 18 வயது முதல் 44 வயது வரையிலான வர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது.இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அலோசியஸ் பள்ளியிலும், கோட்டார் கவிமணி பள்ளியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. கோவேக் சின் 2-வது டோஸ் போடும் சிறப்பு முகாம் நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்தது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தள்ளுமுள்ளு -வாக்குவாதம்
இதன் காரணமாக நேற்று நாகர்கோவில் நகரில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். நாகர்கோவில் கோட்டார் கவிமணி பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெற்ற முகாமுக்கு 6 மணிக்கே பொதுமக்கள் திரண்டு வந்து நின்றனர். இதனால் அந்த பள்ளியிலிருந்து கோட்டார் போலீஸ் நிலையம் செல்லும் பாதையில் திருமண மண்டபம் வரையிலும், சவேரியார் பேராலயம் செல்லும் பாதையில் செட்டித்தெரு திருப்பம் வரையிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் அவ்வளவு பேருக்கும் தடுப்பூசி மருந்து இல்லாததால் அதிகாரிகள் முதலில் இருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி போட்டனர். அப்போது டோக்கன் பெறுவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோட்டார் கவிமணி பள்ளியில் திரண்டிருந்த மக்களில் சுமார் 500 பேருக்கு மட்டுமே நேற்று தடுப்பூசி போட முடிந்தது. டோக்கன் கிடைக்காதவர்கள் மறுநாள் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினர்.
உடனே பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலையிலிருந்து மதியம் வரை கோட்டார் கவிமணி பள்ளி வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது.
ஏமாற்றம்
இதேபோல் வல்லன்குமாரன் விளை அரசு பள்ளியிலும், வடசேரி எஸ். எம்.ஆர்.வி. பள்ளியிலும், வெட்டூர்ணிமடம் அலோசியஸ் பள்ளியிலும், டதி பள்ளியிலும் தடுப்பூசி போட வந்த மக்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த பள்ளிகளிலும் டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. போதுமான மருந்து இல்லாததால் இந்த சிறப்பு முகாம்களிலும் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இணையதள இணைப்பு தடை
தடுப்பூசி சிறப்பு முகாம்களின் போது தடுப்பூசி போட வருபவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் எண்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்வது வழக்கம். நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே இணையதள இணைப்பு தடைபட்டதால் தடுப்பூசி போடும் பணி இடையில் சிறிது நேரம் நிறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story