பொதுமக்களிடம் ஆபாச பேச்சு: மானூர் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்


பொதுமக்களிடம் ஆபாச பேச்சு: மானூர் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2021 2:21 AM IST (Updated: 4 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் ஆபாசமாக பேசிய மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூர் பகுதியில் கொரோனா ஊரடங்கை மீறி பொதுமக்கள் சிலர் நடமாடுவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு தெருவில் விளையாடிக் ்கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு வாலிபரை மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மடக்கிப்பிடித்தார். தொடர்ந்து அந்த வாலிபரின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார்.

உடனே அவர்கள், சப்-இன்ஸ்பெக்டரிடம் எதற்காக போலீஸ் நிலையம் வர வேண்டும் என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக ஒருவரின் கை சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரின் பெற்றோரை ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர், தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

இந்த சம்பவத்தை அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அந்த பகுதியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன் அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தாக்கல் செய்தனர். 

அந்த அறிக்கையின் அடிப்படையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு மானூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து அதிரடியாக நேற்று உத்தரவிட்டார். பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story