சேலத்தில் யூ-டியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய தொழிலாளி கைது- கல்லூரி மாணவரும் சிக்கினார்
சேலத்தில் யூ-டியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவர் ஒருவரும் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலத்தில் யூ-டியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவர் ஒருவரும் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டார்.
சாராய ஊறல்
சேலம் பெரிய புதூர் பகுதியில் வீட்டில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக அழகாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் பெரிய புதூர் பகுதியில் பல்வேறு வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கூலித்தொழிலாளி முத்தழகன் (வயது 36) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் பெரிய அண்டாவில் சாராய ஊறல் இருப்பதை கண்டு பிடித்தனர்.
யூ-டியூப்
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் தனது பெற்றோர் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். விற்பனையாகாத அழுகிய வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை எடுத்துக் கொண்டு அதன் மூலம் வீட்டில் வைத்தே சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டு இருப்பதாகவும், மேலும் சாராயம் காய்ச்சுவது எப்படி? என்பது குறித்து யூ-டியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டதாகவும், அதை பார்த்து ஊறல் போட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சாராயம் காய்ச்ச முயன்ற தொழிலாளி முத்தழகனை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 10 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
கல்லூரி மாணவர்
சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் வாலிபர் சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேல் என்பவரது மகன் பூபதி (20) என்பதும், சேலம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் சாராயம் காய்ச்சிய மாணவர் பூபதியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம், 15 லிட்டர் ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வருமானம் இல்லாததால்....
கூலித் தொழிலாளியான தந்தைக்கு ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால் பிழைப்பிற்காக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக போலீசாரிடம் மாணவர் பூபதி கூறியுள்ளார். மேலும் அந்த மாணவர் ஒரு லிட்டர் சாராயத்தை ரூ.1,500-க்கு விற்பனை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story