ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மேலும் 4,500 கொரோனா தடுப்பூசிகள்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மேலும் 4,500 கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவும் மாவட்ட நிர்வாகத்தின் விழிப்புணர்வு காரணமாக மக்களிடையே தடுப்பூசி போட வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நாள்தோறும் 500 முதல் 800 வரை இருந்த தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை தற்போது நாள்தோறும் 3 ஆயிரம் பேர் வரை அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 97 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதுநாள் வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்காக 270 தடுப்பூசிகளும், 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்காக 320 தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. இந்தநிலையில் தமிழகத்தின் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 500 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடையின்றி போடப்பட உள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வர உள்ளது. அந்த தடுப்பூசிகள் வந்ததும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.
இந்த தகவலை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
Related Tags :
Next Story