தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி கொத்தனூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, தேன்கனிக்கோட்டை தாலுகா கொத்த கொண்டப்பள்ளியை சேர்ந்த வெங்கி என்கிற வெங்கடேஷ் (21) என்பவர் அங்கு வந்தார். அப்போது வெங்கடேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வெங்கி என்கிற வெங்கடேசை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபரும், சிறுமியும் பழகி வந்ததும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை விட்டு சென்றதும் பின்னர் சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு வந்ததும் தெரிய வந்தது.
இந்தநிலையில் வாலிபர் வெங்கடேஷ் மீண்டும் சிறுமியின் வீட்டிற்கு வந்து அவரை அழைத்ததும், அந்த நேரம் சிறுமி வர மறுத்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story