நீர்நிலைகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்


நீர்நிலைகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
x
தினத்தந்தி 4 Jun 2021 6:06 AM IST (Updated: 4 Jun 2021 6:25 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கோடைகாலமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டு கிடந்தது. 

மேலும் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு பசுமை இழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கூடலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதற்கு ஏற்ப கூடலூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. மேலும் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளதால், அதில் பிளாஸ்டிக் கழிவுகளும் அடித்து வரப்படுகிறது.

இதனால் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி தண்ணீர் சீராக செல்ல முடியாமல் உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் இனி வரும் காலங்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- 
பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளி பகுதியில் சமூக விரோதிகள் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். 

கடந்த காலங்களில் தண்ணீரின்றி நீர்நிலைகள் வறண்டு கிடந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து வருகிறது. இதன் மூலம் வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

 எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story