திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு ஓவியங்கள்
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு ஓவியங்களை பல்வேறு வண்ணங்களில் வரைந்துள்ளனர்.
திருவள்ளூர்,
கொரோனா தொற்று 2-வது அலையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பில் கொரோனா தொற்று குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்தும், பொதுமக்களிடையே மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 அடி உயரமும் 150 அடி நீளம் உள்ள சுவரில் பொதுமக்களுக்கு பார்வையில் படும்படி விழிப்புணர்வு ஓவியங்களை பல்வேறு வண்ணங்களில் வரைந்துள்ளனர்.
தடுப்பூசியே ஆயுதம், முககவசமே கேடயம், தடுப்பூசி போடுவோம், கொரோனாவை விரட்டுவோம், தனித்திரு, விழித்திரு, விலகி இரு, வெளியில் சுற்றாதே, உயிருடன் விளையாடாதே என்ற வாசகங்களுடன் பெரிய அளவில் ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு ஊசி போடுவது, கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை போலீசார் பாதுகாப்பது போன்ற ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Related Tags :
Next Story