சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி சிடி மணிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நீதிபதி விசாரணை


சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி சிடி மணிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நீதிபதி விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2021 9:50 AM IST (Updated: 4 Jun 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற சிடி மணியிடம், ஆஸ்பத்திரியில் நேரில் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பூந்தமல்லி,

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சிடி மணி என்ற மணிகண்டன் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த சிடி மணி, மற்றொரு ரவுடியை தீர்த்துக்கட்ட சதிதிட்டம் தீட்டியதால் நாவலூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்றார்.

அங்கிருந்து காரில் தப்பிய சிடி மணியை போரூர் மேம்பாலம் அருகே போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது காரில் இருந்தபடியே சிடி மணி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் காரின் கண்ணாடியை துளைத்தபடி வெளியே பாய்ந்த தோட்டா, அங்கு நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையில் பாய்ந்தது.

பின்னர் சிடி மணி, காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயற்சித்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்ததால் போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிடி மணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரவுடி சிடி மணி இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிடி மணியிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிடி மணி தன்னுடைய செல்போனில் ஒருவித செயலியை பயன்படுத்தி உள்ளார். அதன்படி போலீசார் தன்னை பிடிக்க வந்தால் அந்த செயலியின் பட்டனை அழுத்தினால் அவரது சம்பந்தப்பட்ட வக்கீல்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் செல்லும்படி அமைத்துள்ளார். போலீசாரிடம் பிடிபடும்போது இதனை அவர் பயன்படுத்தி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சிடி மணி மீது ஆயுதங்கள் வைத்திருத்தல், கொலை முயற்சி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிடி மணி சிகிச்சை பெற்று வருவதால் அவரை நீதிபதியிடம் நேரில் அழைத்து வந்து ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின், நேரடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிடி மணியிடம் விசாரணை செய்தார். பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சிகிச்சைக்கு பிறகு அவரை சிறையில் அடைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சிடி மணியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Next Story