மும்பையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்; இன்று 87 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து வருகிறது
மும்பையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று 87 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து கிடைக்கும் என மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியுள்ளார்.
87 ஆயிரம் டோஸ் மருந்து
மும்பையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாக போட்டு வருகின்றனர். ஆனால் போதிய அளவு மருந்து இல்லாததால் அடிக்கடி தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படுகிறது. நேற்றும் கூட மருந்து இல்லாததால் தடுப்பூசி போடும் பணி மும்பையில் நடைபெறவில்லை. இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) மும்பைக்கு 87 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கும் என மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மும்பைக்கு வெள்ளிக்கிழமை (இன்று) 87 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ்கள் சப்ளை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். மருந்து கிடைத்தவுடன் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கும்.
தடுக்க நடவடிக்கை
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 2 டோஸ் தடுப்பூசி போட முயற்சி செய்து வருகிறோம். ஏஜென்டுகளிடம் இருந்து மாநகராட்சி தடுப்பு மருந்து வாங்காது. கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்தை மாநகராட்சி வாங்குகிறது. அந்த நோயை கட்டுப்படுத்த மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story