புதுவையில் அமைச்சர்கள் நியமனம் குறித்து பா.ஜ.க. பொறுப்பாளருடன் ஆலோசனை மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று வருகை
புதுவையில் அமைச்சர்கள் நியமனம் குறித்து பா.ஜ.க. பொறுப்பாளருடன் சாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி,
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே அமைச்சரவை பதவி இடங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர்கள், சபாநாயகர் பதவியில் யார் யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் நேற்று பெங்களூரு சென்றனர். அங்கு அவர்கள் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை சந்தித்துப் பேசினார்கள்.
காலில் அடிபட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரியில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது புதுவை சபாநாயகர், அமைச்சர்கள் பதவிகளில் யாரை நியமிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதன்பின் சாமிநாதன், நமச்சிவாயம் ஆகியோர் உடனே புதுவை திரும்பினர்.
இதற்கிடையே பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் சி.டி.ரவி இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர்கள், சபாநாயகர் பதவியில் யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அந்த பட்டியலுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் பேசுகிறார். பா.ஜ.க.வை பொறுத்தவரை நமச்சிவாயம், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவிகளும் ஏம்பலம் செல்வத்துக்கு சபாநாயகர் பதவியும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story