மதிப்பெண், நுழைவுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்; 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: மராட்டிய கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்த கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட், மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பொதுத்தேர்வு
இந்தநிலையில் மாநில பாடத்திட்டங்களின் கீழ் செயல்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.அந்த வகையில் மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் யோசனையை கோரி இருப்பதாக கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரத்து செய்து முடிவு
கூட்டம் முடிந்த பிறகு மந்திரி விஜய் வடேடிவார் நிருபர்களிடம் கூறுகையில், "12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்வை ரத்து செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது" என்றார். இந்தநிலையில் கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மராட்டிய அரசு ரத்து செய்துள்ளது. இந்தநிலையில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது எப்படி, பொதுநுழைத்தேர்வு மற்றும் இதர நுழைவு தேர்வு விவகாரங்கள் குறித்து
விரைவில் கல்வித்துறை முடிவு எடுக்கும்.மாணவர்கள், பெற்றோர்களின் பதற்றத்தை உணர்ந்து உள்ளோம். அதனை அறிந்து தேர்வு விஷயத்தில் முடிவு எடுத்துள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐகோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் உதய் வாருன்ஜிகர் என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு ரத்து என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது அதில் கோர்ட்டு தலையிட முடியுமா, மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா என்று மனுதாரருக்கு தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி கேட்டார்.
மேலும் தன்னிச்சையான முடிவு மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படும்போது தான் கோர்ட்டு தலையிட முடியும் என்றும் தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக வக்கீல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story